தொடர்ந்து சொதப்பும் ராஜஸ்தான் கேப்டன்! நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தாத அணி!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (14-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி அணி.ஆனால் டெல்லி அணியின் ப்ரித்வி ஷாவை தனது முதல் பந்திலேயே போல்டாக்கி, தனது வேகத்தின் மூலம் டெல்லிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ஜோப்ரா ஆர்ச்சர். முதல் ஓவரின் அனைத்து பந்துகளையும் 142 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீச, அரண்டு போனது டெல்லி.

ஆர்ச்சரின் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாது ரகானேவும் 2 ரன்களில் அவுட் ஆகி, கிடைத்த இரண்டு வாய்ப்பையும் பயன்படுத்தத் தவறிவிட்டார். 10/2 என்ற இக்காட்டான நிலையில் தவானுடன் கைகோர்த்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றிய இருவரும் அரைசதத்தைக் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தவான் 33 பந்தில் 6 பவுண்டரி 2 சிக்சர் என 57 ரன்களை விளாசி இந்த சீசனின் இரண்டாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். கேப்டன் ஐயரும் 43 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர் என 53 ரன்களை விளாசினார். பின்னர் களமிறங்கியவர்கள் இரட்டை இலக்கு ரன்களை அடிக்க, டெல்லி இருபது ஓவர் முடிவில் 161/7 ரன்களை விளாசியது.

நேற்றைய போட்டியில் பந்து வீச்சில் மிக சிறப்பாகச் செயல்பட்ட ராஜஸ்தான் அணியின் சார்பாக ஆர்சர் 3, உனட்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இருபது ஓவரில் 162 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. ஓவருக்கு 8.1 ரன் தேவைப்பட்ட நிலையில் தொடக்க இணையான பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆட தொடங்கினர். இதனால் அணியின் ரன் ரேட் 11 மேல் சென்றது.

எதிர்பாராத விதமாக 22 ரன்களை அடித்த பட்லர் நோர்ட்ஜா வீசிய பந்தில் போல்ட்டாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் இந்தமுறையும் ஏமாற்றம் அளித்தார். ஸ்மித் தொடர் சொதப்பல் தான் அணியின் தோல்விக்குப் பிரதானமான காரணம். முதல் இரண்டு போட்டியிலும் கலக்கிய ஸ்மித், இரண்டிலும் வென்ற ராஜஸ்தான் ஆனால் இவர் விளையாடாத அனைத்து போட்டிகளிலும் ராஜஸ்தான் தோற்றுள்ளது. இந்த போட்டியிலும் 1 ரன் அடித்து அஷ்வினிடம் போல்டாகி வெளியேறினார்.

பின்னர் இறங்கிய சாம்சன் மற்றும் உத்தப்பா ஓரளவு ஆடினாலும் அவர்களால் அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்த செல்ல முடியவில்லை. இதனால் இருபது ஓவர் முடிவில் 148/8 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது.

டெல்லி அணி சார்பில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் நோர்ஜா இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மீண்டும் முதல் இடத்தை அடைந்தது டெல்லி அணி. ஆட்ட நாயகன் விருதை நோர்ட்ஜா (4-0-33-2) பெற்றார்.

More News >>