சபரிமலை நடை நாளை திறப்பு.. பக்தர்கள் நிபந்தனைகளுடன் அனுமதி...!
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை திறக்கப்படுகிறது. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
4வது கட்டமாக ஊரடங்கு நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்த முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டலக் கால பூஜைகளில் தினமும் 1,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. முழுக்க முழுக்க ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிப்பது என்றும், முன்பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட சான்றிதழை இணைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் மண்டலக் காலத்திற்குப் பக்தர்களை அனுமதிப்பதற்கு முன்னோடியாக இம்மாதம் ஐப்பசி மாத பூஜைகளுக்கு நடைதிறக்கும் போது சோதனை அடிப்படையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கேரள அரசு இம்மாதம் முதலே சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்டது. ஐப்பசி மாத பூஜைகளில் தினமும் 250 பக்தர்களை அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த மாதத்திலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நாளை மாலை 5 மணிக்குச் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 17ம் தேதி முதல் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்குகின்றன. 21ம் தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்குச் சபரிமலையில் வைத்தும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். பம்பை ஆற்றில் குளிப்பதற்குப் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதற்காகப் பம்பை பகுதியில் ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் திரும்பிச் சென்றுவிட வேண்டும். சபரிமலையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றியே தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.