திருமணத்திற்கு மறுத்த காதலியை உயிருடன் தீ வைத்த காதலன்..!
திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணைக் காதலன் உயிருடன் தீ வைத்துக் கொளுத்தினார். உடலில் தீ பரவியவுடன் ஓடிச்சென்று காதலனைக் கட்டிப் பிடித்து அவரையும் சேர்த்து தீயில் பொசுக்கினார் அந்த இளம்பெண். இறுதியில் இரண்டு பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த திகில் சம்பவம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்துள்ளது.காதலிக்க மறுக்கும் இளம் பெண்களை ஆசிட் வீசியும், உயிருடன் எரித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்துள்ளது. ஆனால் தன்னை எரித்த காதலனைப் பழிக்குப்பழி வாங்க உடலில் பற்றி எரியும் தீயுடன் ஓடிச்சென்று அந்த வாலிபரைக் கட்டிப்பிடித்து அவரையும் சேர்த்து எரித்துக் கொன்றார் அந்த இளம் பெண்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் நாகபூஷணம் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னாரி (24) என்ற பெண்ணை காதலித்து வந்தார். சின்னாரி அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். ஆனால் இவர்களது காதலுக்கு சின்னாரியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து காதலன் நாகபூஷணத்தை சந்திப்பதை சின்னாரி தவிர்த்து வந்தார். இது நாகபூஷணத்திற்கு ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அவரை பலமுறை பின்தொடர்ந்து சென்ற நாகபூஷணம் தன்னை காதலிக்க வேண்டும் என்றும், உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் தனது வீட்டில் எதிர்ப்பு இருப்பதால் காதலிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சின்னாரியை நாகபூஷணம் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த சமயத்தில் நாகபூஷணம் தயாராகக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை சின்னாரியின் உடலில் ஊற்றி தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடலில் தீ பற்றி எரிந்தது. அப்போது சிறிதும் யோசிக்காமல் சின்னாரி ஓடிச்சென்று நாகபூஷணத்தை இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
இதையடுத்து அவரது உடலிலும் தீ வேகமாகப் பரவியது. நிமிட நேரத்தில் இருவரும் அங்கேயே கருகி விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே சின்னாரி பரிதாபமாக உயிரிழந்தார். நாகபூஷணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.