பஸ்வான் கட்சி போட்டி.. பீகாரில் நிதிஷ்குமாருக்கு பாஜகவின் மறைமுக நெருக்கடி..
பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய லோக்ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி நெருக்கடி கொடுத்துள்ளது.மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சியும் இடம் பெற்றிருந்தது. ராம்விலாஸ் பஸ்வான் உணவு அமைச்சராக இருந்தார். சமீபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார்.இந்நிலையில், கட்சிக்குத் தலைவராக உள்ள அவரது மகன் சிராக் பஸ்வான், கூட்டணியில் இருந்து விலகி விட்டார்.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. பீகாரில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் இதர கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
அதே சமயம், சிராக் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. இதன்மூலம், பாஜகவைவிட நிதிஷ்குமாரின் கட்சிக்குக் குறைந்த இடங்கள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்தவர்தான் முதல்வராக வேண்டுமென்று நிதிஷ்குமாருக்கு ஏற்கனவே பாஜகவினர் நெருக்கடி கொடுத்தனர். அதை அவர் ஏற்காததால் கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது. கடைசியில் நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா அறிவித்து விட்டார்.
இந்த சூழலில், சிராக் பஸ்வானை தனியாகக் களம் இறக்கி விட்டிருப்பதன் மூலம், பாஜவுக்குக் கூடுதல் இடங்களும், நிதிஷ்கட்சிக்கு குறைந்த இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம், முதல்வர் பதவியை நிதிஷுக்கு கொடுக்காமல் பாஜக பறிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த வகையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தைக் கடுமையாக எதிர்த்து சிராஜ்பஸ்வான் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தந்தை ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்குப் பிறகு ஆன்லைனில் மட்டும் பிரச்சாரம் செய்த வரும் சிராக் பஸ்வான், ஐக்கிய ஜனதா தளத்திற்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும், நாளை நமது குழந்தைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகப் பீகாரை விட்டு வெளியேற வைக்கும் வாக்காக அமையும் என்று கூறியிருக்கிறார்.எனினும், பஸ்வானின் லோக்ஜனசக்தியுடன் ரகசிய உறவு இல்லை என்பது போல் பாஜகவினர் பேசி வருகின்றனர். மேலும், பிரசாரத்தில் பிரதமர் மோடி படத்தை தங்கள் கூட்டணி மட்டுமே பயன்படுத்தும் என்றும், அதை லோக்ஜனசக்தி பயன்படுத்தினால் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்வோம் என்றும் பாஜக துணை முதல்வர் சுசில்குமார் மோடி கூறியுள்ளார்.
இதற்கிடையே, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த கூட்டணி, லாலுவின் மகன் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.