ஒரு வருடமாக உணவு கொடுக்காமல் மனைவியை கழிப்பறைக்குள் பூட்டி வைத்த கணவன்
ஹரியானாவில் ஒரு வருடமாகச் சரியாக உணவு கொடுக்காமல் வீட்டுக் கழிப்பறையில் கணவன் பூட்டி வைத்திருந்த இளம்பெண்ணை மகளிர் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர்.ஹரியானா மாநிலம் பானிப்பட் அருகே உள்ளது ரிஷ்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அவரது கணவர் 1 வருடத்திற்கு மேலாக வீட்டுக் கழிப்பறையில் பூட்டி வைத்திருப்பதாக பானிப்பட் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்ட அதிகாரி ரஜினி குப்தாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரஜினி குப்தா தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஜினி குப்தாவுக்கு கிடைத்த தகவல் உண்மை தான் எனத் தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள நரேஷ் என்பவரின் மனைவி 1 வருடத்திற்கு மேலாக வெளியே வருவதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து நரேஷின் வீட்டுக்குச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அதுபோன்ற சம்பவம் எதுவும் இல்லை என்று அதிகாரிகளிடம் நரேஷ் மறுத்தார். அப்போது அவரது மனைவி குறித்து அதிகாரிகள் கேட்டபோது உடல்நலமில்லாமல் அறையில் படுத்துத் தூங்குவதாகக் கூறினார். ஆனால் அதை நம்பாமல் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது வீட்டில் எந்த அறையிலும் நரேஷின் மனைவி இல்லை எனத் தெரியவந்தது. தொடர்ந்து வீட்டுக் கழிப்பறைக்குச் சென்று பார்த்தபோது அது வெளிப்புறமாகப் பூட்டுப் போடப்பட்டிருந்தது. பூட்டை திறக்குமாறு அதிகாரிகள் கூறியும் நரேஷ் அதற்கு மறுத்தார்.
இதையடுத்து அதிகாரிகள் பூட்டை உடைத்துத் திறந்தபோது கழிப்பறைக்குள் அவரது மனைவி எலும்பும் தோலுமாக மயங்கிய நிலையில் கிடந்தார். இதில் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அந்த இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் 1 வருடத்திற்கு மேலாக அந்த பெண்ணை கணவன் நரேஷ் கழிப்பறைக்குள் பூட்டி வைத்திருந்தது தெரியவந்தது. தனது மனைவிக்கு மனநலக் கோளாறு இருந்ததால் தான் கழிப்பறைக்குள் பூட்டி வைத்திருந்ததாக நரேஷ் கூறுகிறார். ஆனால் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு மனநலக் கோளாறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று ரஜினி குப்தா கூறினார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.