மீண்டும் மலையாளத்திற்கு செல்லும் விஜய் சேதுபதி
ஜெயராமுடன் இணைந்து நடித்த 'மார்க்கோனி மத்தாயி' என்ற படத்திற்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதி மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.மலையாள சினிமாவில் மோகன்லால், மம்மூட்டி, பிரித்திவிராஜ், நிவின் பாலி உள்பட முன்னணி நடிகர்கள் கோலோச்சி கொண்டிருந்தாலும் தமிழ் சூப்பர் நடிகர்களுக்கும் நல்ல மவுசு இருக்கிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் தமிழ்நாட்டைப் போலவே அதேநாளில் கேரளாவிலும் ரிலீசாகும். விஜய் நடித்து கடைசியாக வெளியான சர்க்கார், பிகில் ஆகிய படங்கள் மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியான தியேட்டர்களை விட அதிக தியேட்டர்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் சமீப காலமாகத் தமிழில் புதிய படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் நடிகர்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகின்றனர்.
விஜய், அஜித்தைப் போலவே நடிகர் விஜய் சேதுபதிக்கும் கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படத்திற்கும் கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நல்ல கதை கிடைத்தால் மலையாள படங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக விஜய், அஜித், சூர்யா உட்பட நடிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் அவர்களை முந்தி விஜய் சேதுபதி கடந்த வருடம் ஒரு மலையாள படத்தில் நடித்தார். ஜெயராமுடன் இணைந்து கடந்த வருடம் இவர் 'மார்க்கோனி மத்தாயி' என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
அந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிகராகவே வருவார். இந்நிலையில் இரண்டாவதாக மேலும் ஒரு மலையாள படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்து என்ற புதுமுக இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார். நாயகியாக நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முழுக்க முழுக்க கேரளாவில் மட்டுமே படப்பிடிப்பு நடக்கிறது. ஆன்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.