கொரோனா விதிமுறைகளை பயணிகள் பின்பற்றாவிட்டால் ஓராண்டு ஜெயில்.. ரயில்வே எச்சரிக்கை
ரயில் பயணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத பயணிகளுக்கு , ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவை ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 15 முதல் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக மட்டும் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி, சென்னை, டில்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட உள்ளன. சென்னை - மதுரை இடையே, வரும் 19 ஆம் தேதி முதல், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை - கோவை இடையே செவ்வாய் தவிர வாரத்தின் 6 நாள்கள் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.சென்னை - டில்லி இடையே திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூரந்தோ ரெயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திர காசிக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல, திருவனந்தபுரத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமருக்கும், கன்னியாகுமரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் கவுராவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
பண்டிகைக் காலங்களுக்கான புதிய ரயில்கள் இயக்கப்பட்ட உள்ள நிலையில், ரயில் பயணங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது இதன்படி பயணிகள் அனைவருக்கும் முக கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயணிகள் யாரேனும் பின்பற்றாவிட்டால், அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.