சபரிமலையில் 7 மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் திறக்கப்பட்டது. அந்த மாதம் 18ம் தேதி கோவில் நடை சாத்தப்பட்டது. அன்று தான் கடைசியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியதால் பங்குனி மாத பூஜைகள் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் லாக் டவுன் நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலக் கால பூஜைகள் தொடங்கும் நவம்பர் மாதம் முதல் தினமும் 1,000 பக்தர்களை நிபந்தனையுடன் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மண்டலக் காலத்திற்கு முன்னோடியாக ஐப்பசி மாத பூஜையின் போது சோதனை அடிப்படையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இந்த மாதம் முதல் தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்ட உள்ளது. 7 மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா நிபந்தனைகளின் படி மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மலை ஏறும்போது பக்தர்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என்றும், பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன், மலை ஏறுவதற்கு உடல் திறன் உள்ளதா என்பது தொடர்பான மருத்துவ சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் சபரிமலைக்கு வடசேரிக்கரை மற்றும் எருமேலி ஆகிய 2 பாதைகள் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்ற பாதைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அன்று வரை தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 21ம் தேதி நடை சாத்தப்பட்டால் மீண்டும் மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 15ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

More News >>