மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம்.. பிரபல இயக்குனர் வேதனை..

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் " நுங்கம்பாக்கம் "தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன். இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. ரிலீஸ் தேதியைப் பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலிலிருந்த இப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் பற்றி தயாரிப்பாளர் ரவிதேவன் கூறியதாவது:முதலில் இந்தப் படத்தை ஏன் ஆதரிக்கணும் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இருக்கும். ஆனால் நாம் இந்தப்படத்திற்கு நல்லாதரவு தரணும். நீங்கள் வீட்டில் இருந்தே பார்க்கும் படியாக வசதி ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தப்படத்தில் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கும். இந்தப்படத்தைப் பெரிதாக வெற்றிபெற வைக்க வேண்டும்" என்றார்.

நடிகர் அஜ்மல்,நுங்கம்பாக்கம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடித்தளமாகக் கொண்ட படம். பல தடைகளைத் தாண்டிக் கொண்டு வந்துள்ளோம். இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு வந்ததிற்குக் காரணம் இருக்கிறது. இந்தப்படம் மூலமாகப் பல விசயங்கள் வெளிவரும். பல உண்மைகள் தெரியும். இப்படத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என்றார்பாடலாசிரியர் சினேகன் கூறும்போது,ஏழுமாதம் கழித்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தின் பிரச்சனைகள் எப்ப முடியும். இந்தப்படம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல இங்கு இவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப்படம் வரா விட்டால் அந்த கொலை வழக்கே நமக்கு மறந்து போய் விடும். எதற்காக இந்த இயக்குநர் மீது ஏழு கேஸ் போட்டார்கள் என்றே தெரியவில்லை.

இந்தப்படம் பற்றிய செய்தி வெளிவந்தாலே பலருக்குப் பயம் வந்துவிடும். தான் எடுத்த காரியத்தைக் கடைசி வரை முடித்த இயக்குநரைப்.பாராட்ட வேண்டும். இந்த நீதிமன்றத்தில் கொஞ்சம் ஈரம் இருந்ததால் தான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. இவ்வளவு போராட்டத்தை சந்தித்த இயக்குனருக்கு இந்த சினிமாக்காரர்கள் யாரும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வராதது மிகவும் தவறான விஷயம், எதையெதையோ பார்த்தோமே..₹49 கொடுத்து இந்தப் படத்தை பார்ப்போம். போராடுபவன் இறைவனின் பிள்ளை. போராட்டம் தோற்பதே இல்லை. இந்தப்படம் பெரு வெற்றியடைய வாழ்த்துகள்" என்றார்.

இயக்குநர் ரமேஷ் செல்வன் கூறும்போது,இரண்டறை வருடப் போராட்டம். கஜினி முகமதுவை விட அதிகப் போராட்டத்தைச் சந்தித்தேன். நான் 80% உண்மையாக இருப்பவன். சினிமாவில் சில விஷயங்களைச் செய்யவே முடியாது. ஒரு மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம். இந்தப் படத்தின் டீசர் வெளிவந்த பின் பெரிய ரீச் ஆனது. அப்பவே வியாபாரத்திற்கு வழி கிடைத்தது. ஆனால் இந்தப்படத்தை வெளியிடக் கூடாது எனப் பெண்ணின் தந்தை கேஸ் போட்டுவிட்டார்.அந்தப்பெண் செத்து மூன்று மணி நேரம் யாருமே அருகில் செல்லவில்லை.

இந்தப்படத்தின் கதையை ரைட்டர் சூளை மேட்டில் ஒவ்வொரு தெருத் தெருவாகப் போய் எழுதினார். இந்தப்படத்தில் சைபர் க்ரைம், போலீஸ் டிப்பார்ட் மெண்ட் முதற்கொண்டு பல விசயங்கள் இருக்கு.இந்தப் படத்தின் இயக்குநரை கைது செய்யணும் என்று போலீஸ், சென்சார் அதிகாரி பக்கிரிசாமியிடம் போய் கேட்டார்கள். நான் பெங்களூரில் போய் ஒளிந்து கொண்டு பின் பெயில் வாங்கியதும் வந்தேன். நான் ஏழு படம் செய்தவன். ஆனால் என்னைப் போலீஸ் 10 கொலைகளைச் செய்தவன் போல நடத்தினார்கள். என ஆபிஸ் பாய்ல இருந்து 24 பேரிடம் விசாரித்தார்கள். போலீஸ் என்னைப் படத்தில் அதைத் தூக்கு இதைத்தூக்கு என்று நச்சரித்தார்கள். கமிஷனர் முதல் பலரையும் சந்தித்துக் கதை சொல்லி அவர்களிடம் 6 மாதம் கழித்துத் தான் லெட்டர் கிடைத்தது.

அதன்பின் சென்சார் போனேன். அங்குப் பெயர் டைட்டில் ஆகியவற்றை மாற்றச் சொன்னார்கள். பின் க்ளைமாக்ஸை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை. பின் ஆறுமாத போராட்டம். அது முடிந்ததும் அந்தணர்கள் கேஸ் போட்டார்கள். அதன்பின் ஒரு வழக்கு வந்தது. அதையும் சமாளித்துப் படத்தை வெளியிட நினைத்தால் கொரோனா வந்து விட்டது. தற்போது Cineflix என்ற ஓடிடியில் படம் வரும் 24-ஆம் தேதி வெளிவருகிறது. இந்தப்படத்தை அனைத்து கேபிள் இணைப்புகளில் 77-ஆம் நம்பரை ரிமோட்டில் அழுத்திப் பார்க்கலாம். தயவு செய்து ₹49 ரூபாய் கட்டிப் பார்க்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை பைரஸி எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் நான் சூசைட் தான் பண்ணணும். ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார்கள்" என்றார்.

More News >>