அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை.. அமைச்சர் அறிவிப்பு..

அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்குத் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாகக் கடிதம் அனுப்பியது குறித்து விளக்கம் கேட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.தர்மபுரியில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:அண்ணா பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இதற்கு மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து அவசியமில்லை. அப்படிப் பெற்றால் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கும். கல்விக் கட்டணங்கள் உயரலாம். நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டியிருக்கும்.

தமிழக மாணவர்களின் நலன் மிகவும் பாதிக்கும். உயிரிய கல்வி நிறுவனமாக மாறுவதால் கூடுதல் நிதி கிடைக்கும் என்றால், அந்த நிதியைத் தமிழக அரசே வழங்கத் தயாராக உள்ளது. எனவே, சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும்.சிறப்பு அந்தஸ்து கோரி, அந்த பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சரியான விளக்கம் தராவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசு வெளியிட்ட புதியக் கல்விக் கொள்கையில் 2035ம் ஆண்டுக்குள் உயர்கல்வி பயில்வோரின் சராசரியை 35 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 49.6 சதவீத மாணவர்கள் உயர்கல்வியில் பயின்று வருகின்றனர். இவ்வாறு கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

More News >>