நடிகை பலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு எதிராக போலீஸ் தரப்பு பரபரப்பு புகார்
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி போலீஸ் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு கொச்சியில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு முதலில் ஆலுவா நீதிமன்றத்திலும், பின்னர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலும் நடந்து வந்தது.
இந்நிலையில் தன்னுடைய பாதுகாப்பைக் கருதி ஒரு பெண் நீதிபதி தலைமையில் தனி நீதிமன்றம் அமைத்து வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம், ஹனி ரோஸ் என்ற பெண் நீதிபதி தலைமையில் ஒரு தனி நீதிமன்றத்தை அமைத்து உத்தரவிட்டது.
இந்த தனி நீதிமன்றத்தில் நடிகை பலாத்கார வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் ஏற்பட்டதால் விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் கோரி தனி நீதிமன்றம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து கடந்த மாதம் முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை பாமா, நடிகர் சித்திக் உள்படப் பலர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையில் திருப்தியில்லை என்றும், விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரி அரசுத் தரப்பு சார்பில் அதிரடியாக ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இந்த வழக்கில் 162வது சாட்சி ஒருவர் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது நீதிமன்றத்தில் ஒரு கடிதம் வாசிக்கப்பட்டது. அதில் போலீஸ் தரப்புக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நிறுத்திவைக்கக் கோரி போலீஸ் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தரப்புக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், எனவே உடனடியாக விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் விரைவில் ஒரு மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்திற்கு எதிராகவே போலீஸ் தரப்பு சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.