போலீஸ் பாதுகாப்புடன் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்.. தனி நீதிபதி அறிவிப்பு..
சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் ஏற்கனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பற்றி வெளியிட்டார். அதில், 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த 30.09.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தோ்தல் வருகிற நவம்பர் மாதம் 22ம் தேதி (22.11.2020-ஞாயிற்றுக் கிழமை) அன்று சென்னை அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (சத்யா ஸ்டூடியோஸ்) வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணை சங்க உறுப்பினர்களின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 12.10.2020 காலை 11 மணி முதல் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் (அலுவலக வேலை நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வறை) நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலுக்கான வேட்புமனு கொரியர் மூலம் பெற விரும்பும் தயாரிப்பாளார்கள் தங்களது முகவரியினை எழுத்துப் பூர்வமாக. கடிதம் கொடுத்து உரிய கட்டணத்தினை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் அளிக்கும் முகவரிக்கு இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலுக்கான வேட்பு மனு அனுப்பி வைக்கப்படும்'எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தயாரிப்பாளர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.அப்போது பேசிய அவர், " 15.10.2020 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இன்று முதல் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெட்டிகளில் போடலாம். 23.10.2020 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 24.10.2020 அன்று மாலை 4 மணி வரை வேட்புமனுவைத் திரும்பப் பெறலாம்.
29.10.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 22.11.2020 அன்று காலை முதல் வாக்குப்பதிவும், அன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். பழைய சத்யா ஸ்டுடியோ என அழைக்கப்படும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும். தயாரிப்பாளர் சங்கத்தில் 4,500 மேல் உறுப்பினர்கள் உள்ளனர். இருந்தாலும் 1,303 பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தும், காவல்துறை பாதுகாப்போடும் தேர்தல் நடைபெறும்", என்றார்.