முன்னாள் டிஜிபி மீது சிபிஐ விசாரணை.. பிரபல காமெடி நடிகர் வழக்கால் பரபரப்பு..
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் அறிமுகமாயினர். எல்லோருமே திரையுலகில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். விஷ்ணு விஷால், சூரி தங்கள் நட்பை அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தனர். அவர்கள் இணைந்து நடித்த வேலன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர்கள் நட்பில் தற்போது முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி அளித்திருக்கும் மோசடி புகார்தான்.
சில தினங்களுக்கு முன் நடிகர் சூரி நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதும், மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீதும் பண மோசடி வழக்கு தொடர்ந்தார். நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தர விட்டது. 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட அறிக்கையில்,என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் சூரி தனக்குக் கொலை மிரட்டல் வருவதாகக் கூறியிருந்தார். எனது உழைப்பெல்லாம் வீணாகி விட்டதே என்று மன உளைச்சலில் மனம் நொந்துபோன சூரி, மோசடியால் நான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பணத்தைத் திருப்பி தருகிறேன் அதுபற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்று என்னிடம் கூறியிருந்தார்கள். 2 வருடம் பொறுமையாக காத்திருந்தேன். இதனால் அவர்கள் மீதான நம்பிக்கை போய் விட்டது. சாலை வசதியே இல்லாத இடத்தை தந்து ஏமாற்றப்பட்டேன்.
இதனால் மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கிறேன். நான் பட்ட கஷ்டம், எனது திறமை எல்லாவற்றையுமே வீணாக தொலைத்துவிட்டேன். இப்போது நீதிமன்றத்தை நம்பியிருக்கிறேன் என்றார்.இந்த விவகாரம் விஷ்ணு, சூரியின் நெருங்கிய நட்பை முறித்திருக்கிறது. இது எப்படி நடந்தது என்பதுபற்றிய ஒரு ப்ளாஷ்பேக் கூறப்படுகிறது. விஷ்ணுவின் தந்தை மோசடி விவகாரத்தில் எப்படி சம்பந்தப்பட்டார் என்ற சில தகவல்கள் தற்போது நெட்டில் கசிந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:அன்பு ராஜன் என்பவரிடம் சூரி நிலம் வாங்கி அதைச் சரிபார்த்துத் தரும்படி விஷ்ணு விஷால் தந்தையிடம் அந்த ஆவணங்களைச் சோதித்து உறுதி செய்யுமாறு கூறினார். ஆனால் அன்புராஜன் சூரியை ஏமாற்றி இருக்கிறார். பிறகு இந்த பிரச்சனையை முடித்துக் கொடுக்குமாறு விஷ்ணுவின் தந்தையிடம் கேட்டார் சூரி. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இதனால் அவர் பெயரையும் புகாரில் சேர்த்தாக தெரிகிறது. இந்த பிரச்சனை விஷ்ணு விஷால், சூரி என்ற நண்பர்களுக்கிடையேயான நட்பை முறித்துப்போட்டுவிட்டது. சூரியின் நட்பை விஷ்ணு முறித்துக்கொண்டாராம். இனி சூரியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அவர் கூறி வருகிறார்.
தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதான நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். முன்னாள் டிஜிபி மீது சிபிஐ விசாரணை கோரிய காமெடி நடிகர் சூரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது