தொடர்ந்து சொதப்பல் கொல்கத்தா அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்...!
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாகத் துணை கேப்டன் ஒயின் மோர்கன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. 2012ல் சென்னையைத் தோற்கடித்தும், 2014ல் பஞ்சாபைத் தோற்கடித்தும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
ஆனால் தற்போதைய சீசனில் கொல்கத்தா அணியின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தற்போது 8 புள்ளிகளுடன் கொல்கத்தா பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் தொடக்கம் முதலே இந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மீது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
கேப்டன் என்ற நிலையிலும், பேட்ஸ்மேன் நிலையிலும் அவர் சோபிக்காதது தான் இதற்குக் காரணம். இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக், பஞ்சாப்புக்கு எதிராக மட்டும்தான் அரைசதத்தைக் கடந்தார். 7 போட்டிகளில் 108 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இது தவிர அணியில் வீரர்களை பேட்டிங்குக்கு அனுப்புவதிலும் விமர்சனங்கள் எழுந்தன. பலமுறை பேட்டிங்கில் சொதப்பிய மேற்கிந்திய வீரர் சுனில் நரேன் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறக்கப்பட்டு வருகிறார். கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடைசியில் சென்னைக்கு எதிரான போட்டியில் மட்டும் தான் சுனில் நரேனை மாற்றினார்.
இந்த காரணங்களால் தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டுக் கடந்த ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டனும், கொல்கத்தாவின் துணை கேப்டனுமான ஒயின் மோர்கனுக்கு கேப்டன் பதவியை வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் ஒயின் மோர்கனை கேப்டனாக நியமித்துள்ளதாகக் கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இப்படி ஒரு முடிவை எடுக்க தினேஷ் கார்த்திக் போல உள்ள ஒருவரால் மட்டுமே முடியும். அந்த தைரியம் அவரிடம் மட்டும் தான் உள்ளது. கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அவர் கூறியபோது அதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். இதனால் கொல்கத்தா அணியின் துணை கேப்டனும், 2019ல் இங்கிலாந்துக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்த அந்த அணியின் கேப்டனுமான ஒயின் மோர்கனை புதிய கேப்டனாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என்று வெங்கி மைசூர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.