முதல்வர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியதால் செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா

காரைக்காலில் உள்ள நேரு மார்க்கெட் பழுதடைந்து விட்டதால் தற்காலிகமாக வேறு இடத்தில் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. நேரு மார்க்கெட் இருந்த இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பழமை மாறாமல் 12 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. புதுவை முதல்வர் நாராயணசாமி புதிய மார்க்கெட் கட்டிடத்தைத் திறந்து வைத்தார் . அவருடன் அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் மட்டுமல்லாது ஏராளமான கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

முதல்வர் மேடைக்குச் சென்றதும் அரசியல் பிரமுகர்கள் நிகழ்ச்சி நடந்த இடத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்துக் கொண்டனர் . இதனால் செய்தியாளர்களுக்கு இடமில்லாமல் போனது. அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த போது அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு போலீசார் உத்தரவிட்டனர்.

இதனால் போலீசாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் செய்தியாளர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள் வெளியேறிய வாசலிலேயே நீண்ட நேரம் காத்திருந்து வருகின்றனர்.செய்தித் துறை அதிகாரிகளுக்குச் செய்தியாளர்கள் இதைத் தெரிவித்த போது , நாங்களே புகைப்படமும் வீடியோவும் எடுத்துத் தருகிறோம் அதைப் பயன்படுத்தி செய்தி வெளியிடுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் செய்தியாளர்கள் ஏகத்துக்கும் கடுப்பாகி விட்டனர். இதைத்தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களும் அங்கேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த முதல்வர் செய்தியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை அழைத்துப் பேசினார் அப்போது செய்தியாளர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் , அரசு நிகழ்ச்சிகளின் போது வாகன வசதி , தண்ணீர், உணவு உள்ளிட்ட ஒரு தேவையையும் செய்தி விளம்பரத்துறை செய்து கொடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினர். செய்தி மற்றும் விளம்பரத்துறை பொறுப்பு உதவி இயக்குனரான குலசேகரனை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

More News >>