சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கின 7 மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் இன்று காலை முதல் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கின. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு சிறப்புப் பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று முதல் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கின. அதிகாலை 5 மணிக்கு மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்தார். இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 7 மாதங்களுக்குப் பின்னர் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இன்று காலை உஷ பூஜைக்குப் பின்னர் சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலை மேல்சாந்தியாக ஜெயராஜ் போத்தியும், மாளிகைப்புறம் கோவில் மேல்சாந்தியாக ரெஜிகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் மண்டலக் கால பூஜைகள் தொடங்கும் அடுத்த மாதம் 16ம் தேதி புதிய மேல்சாந்திகளாகப் பொறுப்பேற்பார்கள். கார்த்திகை 1ம் தேதி முதல் இருவரும் சபரிமலையில் பூஜைகளைத் தொடங்குவார்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்களது தலைமையில் தான் சபரிமலையில் முக்கிய பூஜைகள் நடைபெறும்.

இன்று முதல் வரும் 21ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அன்று வரை தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 21ம் தேதி இரவு 8 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மண்டலக் காலம் முதல் தினமும் 1,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அப்போதும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

More News >>