தமிழக அரசு நடத்தும் நீட் பயிற்சி மையங்களில் ஒருவர் கூட தேர்ச்சியில்லை.. காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு..

தமிழக அரசு நடத்திய நீட் பயிற்சி மையங்களில் படித்த 19 ஆயிரம் பேரில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் இது வரை ஒப்புதல் அளிக்கவில்லை.

கடந்த செப்.15ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாவுக்கு ஒரு மாதமாகியும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, மத்திய பாஜக அரசுக்கு இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை அறிய முடிகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் 11 பேர் மட்டுமே சேர முடிந்தது என்ற மனுதாரரின் தகவலைக் கேட்டு வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், கவர்னருக்கு ஒரு மாத அவகாசம் போதாதா, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்பட வாய்ப்பே இல்லையா? என்று கண்கலங்கியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு நடத்துவதற்கு முன்பு கடந்த 2015-16ல் 456 மாணவர்களுக்கும், 2016-17ல் 438 மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஆனால், 2017-18ல் இது வெறும் 40 ஆகக் குறைந்திருக்கிறது. இதிலிருந்து நீட் தேர்வு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் வஞ்சிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் புதிய மசோதா அமலுக்கு வந்தால், கிராமப்புற மாணவர்கள் 400 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கடந்த ஆண்டு படித்த 19 ஆயிரம் மாணவர்களில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தமிழக அரசு தகுதியான ஆசிரியர்களை நியமிக்காததுதான் இதற்குக் காரணம். எனவே, தமிழக அரசுதான் இதற்குப் பொறுப்பாகும். எனவே, மசோதாவுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். அவர் தராத வரை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையைத் தொடங்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

More News >>