பாடகர்களுக்கு மரியாதை இல்லை மலையாளத்தில் இனி நான் பாடமாட்டேன் பிரபல பாடகர் அதிரடி அறிவிப்பு

மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்கள் மற்றும் பின்னணி பாடகர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. எனவே இனி மலையாள சினிமாவில் பாடப் போவதில்லை என்று பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்திய சினிமா உலகில் பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மலையாளியாக இருந்தாலும் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். சினிமா பாடல் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் கைதேர்ந்தவர். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கர்நாடக இசைக் கச்சேரியும் நடத்தி வருகிறார். யேசுதாசைப் போல தனக்கும் கர்நாடக இசையைப் படித்து கச்சேரி நடத்த மிகுந்த ஆவல் இருப்பதாக மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

யேசுதாசைப் பின்தொடர்ந்து அவரது மகன் விஜய் யேசுதாசும் சினிமா பாடகர் ஆனார். கடந்த 2000ல் முதலில் மலையாளத்தில் இவர் பாடத் தொடங்கினார். இதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன. மலையாளத்தில் 3 முறை சிறந்த பாடகருக்கான மாநில அரசின் விருதுகள் கிடைத்துள்ளன. இதுதவிர 5 முறை பிலிம்பேர் விருதுகளும், 2014ம் ஆண்டு நந்தி விருதும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஒரு மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விஜய் யேசுதாஸ் கூறியது: மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. ஆனால் தமிழ், தெலுங்கு மொழிகளில் எந்த பிரச்சினையும் இல்லை. அங்குப் பாடகர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கின்றனர். மலையாளத்தில் நான் பலமுறை பலரிடம் அவமானப்பட்டுள்ளேன். எனவே இனியும் அந்த அவமானங்களைத் தாங்க முடியாது என்பதால் நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். இனி மலையாள சினிமாவில் பாடப் போவதில்லை என்பது தான் அந்த முடிவாகும். எனக்கு மட்டுமல்ல, எனது தந்தை யேசுதாசும் மலையாள சினிமாவில் பலமுறை அவமானங்களைச் சந்தித்துள்ளார் என்று கூறினார்.விஜய் யேசுதாஸ் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கூறுகையில், 20 வருடங்களாக சினிமாவில் இருந்தும் நான் அவ்வளவாகச் சம்பாதிக்கவில்லை. இனியும் ஒரே தொழிலைச் செய்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. விரைவில் ஒரு புதிய தொழிலைத் தேர்ந்தெடுக்க உள்ளேன் என்று கூறினார். அமெரிக்காவின் முன்னணி பிராண்டின் ஒரு சலூன் ஒன்றைத் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறினார். சமீபத்தில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து விஜய் யேசுதாஸ் கொச்சியில் சலூன் தொடங்கியுள்ளார்.

More News >>