தனிஷ்க் விளம்பரத்தை ஆதரித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் எதிர்ப்பு குரல்..

தனிஷ்க் விளம்பரத்தை ஆதரித்துப் பதிவிட்ட, கலப்பு திருமணம் செய்த பெண்ணுக்கு டிவிட்டரில் 40 ஆயிரம் எதிர்ப்பு பதிவுகள் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் குஜராத் மாநிலம், குட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து இளம் பெண், முஸ்லிம் குடும்பத்தில் மருமகளாகி வளைகாப்பு நடைபெறுவது போல் காட்சியும், வசனமும் அமைக்கப்பட்டிருந்தது.இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், சமூக ஊடகங்களில் இந்த விளம்பரத்திற்கு எதிராகவும், தனிஷ்க் நிறுவனத்திற்கு எதிராகவும் கடுமையான பதிவுகள் வெளியாயின. அதே சமயம், இந்தியாவின் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில்தான் இந்த விளம்பரம் உள்ளதாக ஆதரவு குரல்களும் ஒலித்தன. திவ்யா தத் இந்த விளம்பரத்திற்குக் குரல் கொடுத்திருந்தார். பலத்த எதிர்ப்புக்கிடையே விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக தனிஷ்க் நிறுவனம் அறிவித்தது.

எனினும், குட்ச் மாவட்டத்தில் காந்திதாம் பகுதியில் உள்ள தனிஷ்க் கடைக்குள் நேற்றிரவு மர்மக் கும்பல் நுழைந்து, அங்கிருந்த மேலாளரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கியிருக்கிறது. இதன்பின், மர்மக் கும்பல் கடையைக் கடுமையாகத் தாக்கி விட்டுச் சென்றுள்ளது. இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஒரு பெண், தனிஷ்க் ஜுவல்லரியின் விளம்பரத்தை ஆதரித்து குரல் எழுப்பியிருந்தார். ஜாரா பர்வால் என்ற அந்த முஸ்லிம் பெண், இந்து கணவரைத் திருமணம் முடித்தவர். தனிஷ்க் விளம்பரத்தின் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் விளம்பரப் படத்தை ஆதரிப்பதாக அவர் டிவிட்டரில் வெளியிட்ட ஆதரவு மெசேஜுக்கு எதிராக ஏராளமான எதிர்ப்பு மெசேஜ்கள் குவிந்தன. மேலும், அவரது வீடு, போன் நம்பரைக் கொடுத்து அடையாளப்படுத்தவும் செய்திருந்தனர்.

இதையடுத்து, புனே போலீசின் சைபர் கிரைம் பிரிவில் ஜாரா பர்வால் புகார் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் விளம்பரத்தை ஆதரித்துப் பதிவிட்டிருந்தேன். இதற்கு ஆன்லைனில் என்னைக் கொடுமைப்படுத்துகின்றனர். எனக்கு எதிராகக் கீழ்த்தரமாக விமர்சித்தும், அவமதிப்பு செய்தும் சுமார் 40 ஆயிரம் மெசேஜ்கள் போடப்பட்டுள்ளன. திட்டமிட்டு என்னைக் குறிவைத்து சிலர் இப்படிச் செயல்பட்டுள்ளனர். அந்த டிவிட்டர் கணக்கு விவரங்களைப் போலீசில் கொடுத்துள்ளேன். எனக்கு இத்தனை மெசேஜ்கள் வந்திருப்பதைப் பார்க்கும் போது நாட்டில் ஏராளமானோருக்கு வேலை இல்லை என்பது தெரிகிறது என்றார்.

More News >>