அதிமுக ஆண்டு விழாவில் குவிந்த தொண்டர்கள்.. சாதா இடைவெளி கூட கிடையாது..

அதிமுக ஆண்டு விழாவில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை. அதிமுக கட்சியின் ஆண்டு விழாவையொட்டி கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றினார். அப்போது ஏராளமான தொண்டர்கள், சமூக இடைவெளி பின்பற்றாமல் ஒருவரை இடித்துக் கொண்டனர்.அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று (அக்.17) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றுவதற்குச் செய்யப்பட்டிருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வரும்போது, அலுவலகத்திற்கு வெளியேயும், உள்ளேயும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் எந்த இடைவெளியும் விடாமல் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு சென்று அவரை வரவேற்றனர்.

அதன்பின், ஓ.பன்னீர்செல்வம் மேடைக்குச் சென்று கட்சிக் கொடியேற்றி வைத்து, தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும், ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளும் கூட இடைவெளி விடாமல், நெருக்கியடித்து நின்றனர். ஏற்கனவே அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற போதும், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாளன்றும் கூட இதே போல் தொண்டர்கள் எந்த கொரோனா கட்டுப்பாடுகளையும் பின்பற்றவில்லை.

அதே சமயம், எதிர்க்கட்சிகள் கூட்டம், பேரணி எல்லாம் நடத்தினாலேயே அவர்கள் மீது கொரோனா விதிமுறைகளை மீறியதாக எப்.ஐ.ஆர் போடப்படகிறது. அதனால், ஆளும்கட்சி என்றால் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லையா என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.

More News >>