கொரோனா பரவல் அதிகரிப்பு கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது

கொரோனா பரவல் அதிகரிப்பு கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.கேரளா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதாரக் குழு இந்த மாநிலங்களுக்கு விரைகிறது.கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோய் பரவல் மிகவும் குறைவாக இருந்தது. மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், கர்நாடகா உள்பட மாநிலங்களில் நோய் பரவல் அதிகளவில் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகக் கேரளாவில் கொரோனா பரவும் வேகம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவிலேயே மிக அதிகமாக ஒரே நாளில் 11,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியது. இந்த மாநிலத்தில் தினமும் சராசரியாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. நேற்று 7,283 பேருக்கு நோய் பரவியது. கேரளாவில் மற்ற மாநிலங்களைவிடப் பரிசோதனைகளும் மிகவும் குறைவாக உள்ளது.

மேலும் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியைக் கேரளா முந்தி விட்டது. இதுவரை கேரளாவில் 3.25 லட்சம் பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2.29 லட்சம் பேருக்கு நோய் குணமாகி உள்ளது. தற்போது 98 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் தற்போது நோய் பரவல் அதிகளவில் உள்ளது.

இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய சுகாதாரத் துறை சார்பில் ஒரு குழுவை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று அந்தந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். வேகமாகப் பரவி வரும் நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை இக்குழு அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கும்.

More News >>