கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மாற்றியதற்கு என்ன காரணம்? கவுதம் காம்பீர் புதிய தகவல்

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மாற்றியதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்று கொல்கத்தாவின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர் கூறுகிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாக தினேஷ் கார்த்திக் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.கவுதம் காம்பிருக்கு பின்னர் கடந்த 2018ல் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு கொல்கத்தா அணி பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றது.

ஆனால் கடந்த ஆண்டு 5வது இடத்திற்கு மட்டுமே கொல்கத்தாவால் வர முடிந்தது. தற்போதைய 13வது சீசனில் கொல்கத்தா அணியின் ஆட்டத்தை அவ்வளவு மோசம் என்று கூற முடியாது. தற்போது இந்த அணி 8 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி 4 தோல்விகளைப் பெற்றுள்ளது. தற்போது இந்த அணி 4வது இடத்தில் உள்ளது.

ஆனால் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதுவரை அவர் விளையாடிய 8 போட்டிகளிலிருந்து 112 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதிகபட்சமாக அவர் குவித்தது 58 ரன்கள். இதுதவிர கேப்டன் என்ற முறையில் அவர் எடுத்த சில முடிவுகள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சிலர் முணுமுணுக்கத் தொடங்கினர். ஆனால் ஐபிஎல் பாதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கேப்டனை மாற்ற வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிரடியாக தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டார்.

நேற்று மும்பை அணியுடன் விளையாடுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி மும்பையிடம் படுதோல்வி அடைந்தது. தினேஷ் கார்த்திக்கும் சரியாக விளையாடவில்லை. இந்நிலையில் இதுகுறித்து கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் கூறியது: பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகத் தான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஆனால் அதில் உண்மையில்லை. மோர்கனுக்காகத் தான் தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியைத் தியாகம் செய்துள்ளார்.

ஐபிஎல் போட்டி பாதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கேப்டனை மாற்றிய நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல. சர்வதேச அளவில் மோர்கன் சிறந்த கேப்டன் தான் என்றாலும், ஐபிஎல் போட்டியில் அவரால் ஏதாவது மாற்றம் கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமே. கிரிக்கெட்டில் விளையாடும் திறன் தான் முக்கியமாகும். தற்போதைய சூழலில் மோர்கானால் கொல்கத்தா அணியில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர வாய்ப்பில்லை. தொடக்கத்திலேயே அவரை கேப்டனாக நியமித்திருந்தால் ஒருவேளை அவரால் ஏதாவது சாதித்திருக்க முடியும். கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகுவதற்கு வேறு சில காரணங்கள் உள்ளன. அவருடைய விளையாட்டில் நிர்வாகத்திற்குத் திருப்தி இருந்திருக்காது. இது துரதிர்ஷ்டவசமானது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>