பறந்து வந்த மயில்... பஸ் மீது மோதி பரிதாபமாக பலி...!
மதுரையில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் மீது பறந்து வந்த மயில் மோதியதில் மயில் பரிதாபமாக உயிரிழந்தது. மதுரை திருமங்கலத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஆண்டாள் புரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கூடலழகர் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நந்தவனத்திலிருந்து ஒரு ஆண் மயில் அந்த வழியே பறந்து வந்தது. வந்த வேகத்தில் அந்த மயில் பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து மயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் இறந்த மயிலை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் பகுதியில் ஆண் மயில் ஒன்று இறந்தது அப்பகுதி மக்கள் சிலரிடம் சோகத்தை ஏற்படுத்தியது.