கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய முறை .. ஓடிபி இருந்தால் தான் சிலிண்டர்..!

வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்களின் செல்போன்களில் வரும் ஓடிபியை காண்பித்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும்.கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை கேஸ் சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்து விவரத்தைக் கூற வேண்டும். அதன் பிறகு தான் நமக்கு சிலிண்டர் வரும்.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் ஐவிஆர்எஸ் எனப்படும் தானியங்கி பதிவு முறை கொண்டுவரப்பட்டது. இதில் நமது செல்போன் எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த செல்போன் எண்ணிலிருந்து சிலிண்டரை புக் செய்தால் உடனடியாக நமது செல்போனுக்கு எஸ்எம்எஸ் வரும். அதில் நம்முடைய பதிவு எண் உட்பட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதைத் தடுப்பதற்காக புதிய ஓடிபி முறையைக் கொண்டுவர நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி சிலிண்டரை புக் செய்தால் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு உடனடியாக ஒரு ஓடிபி நம்பர் வரும். அதே எண் சிலிண்டரை டெலிவரி செய்பவரின் செல்போனுக்கும் செல்லும். நமக்கு வந்த ஓடிபி நம்பரை காண்பித்தால் மட்டுமே நமக்கு சிலிண்டர் கிடைக்கும். நம்முடைய செல்போன் நம்பரில் ஏதாவது மாற்றம் இருந்தால் உடனடியாக அதை அப்டேட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது.

மேலும் ஏஜென்சியில் நாம் அளித்த முகவரியில் மாற்றம் இருந்தாலும் உடனடியாக அதைப் புதுப்பிக்க வேண்டும். முதல் கட்டமாக இந்தியாவில் 100 நகரங்களில் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு விட்டது. மற்ற நகரங்களுக்கு நவம்பர் 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. வணிக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகத்திற்கு இந்த முறை அமல்படுத்தப் பட மாட்டாது. வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு பயன்பாட்டில் வருடத்திற்கு இந்தியாவில் 3.3 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. இதே நிலையில் சென்றால் 2030ல் சமையல் எரிவாயு பயன்பாடு 3.4 கோடி டன்னை அடையும்.இதனால் 2030க்குள் வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு பயன்பாட்டில் இந்தியா சீனாவை முந்தும் எனக் கருதப்படுகிறது.

More News >>