7 மாதங்களுக்கு பின்னர் தியேட்டர்கள் திறப்பு...!
கொரோனா பரவலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த சினிமா திரையரங்குகள் 7 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. சண்டிகரில் ஒரு தியேட்டரில் சினிமா பார்க்க ஒரே ஒரு நபர் மட்டும் தான் வந்திருந்தார். அவருக்காக சினிமா திரையிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் லாக்டவுன் நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து புதுச்சேரி, பஞ்சாப் உள்பட சில மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருந்தது.
சண்டிகரில் ஒரு தியேட்டரில் ஒரே ஒரு நபர் மட்டும் தான் சினிமா பார்ப்பதற்காக வந்தார். இங்குள்ள சிட்டி சென்டர் என்ற வணிக வளாகத்தில் பிவிஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உள்ளது. இதில் ஒரு தியேட்டரில் 'கேரி ஆன் ஜத்தா 2' என்ற பஞ்சாபி சினிமா திரையிடப்பட்டிருந்தது. இந்த தியேட்டரில் 210 பேர் அமர்ந்து சினிமா பார்க்கலாம். சினிமா பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்டு வருவார்கள் என்ற எண்ணத்தில் தியேட்டரில் சானிடைசர் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அந்த சினிமாவை பார்ப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சந்தீப் சூரி என்ற ஒரே ஒரு நபர் மட்டும் தான் வந்திருந்தார்.
அரசு ஊழியரான இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். பல நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல் நலம் தேறினார். தீவிர சினிமா ரசிகரான இவர் சினிமா பார்க்கும் ஆவலில் தியேட்டருக்கு வந்தார். அந்த ஒரேயொரு நபருக்காக வேறுவழியின்றி சினிமா திரையிடப்பட்டது. தன்னுடைய குடும்பத்தினரும் சினிமா ரசிகர்கள் தான் என்றும், கொரோனாவுக்கு பின்னர் தியேட்டரில் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே தனியாக வந்ததாகவும், ஒரு சில நாட்களில் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் சினிமாவுக்கு அழைத்து வரத் தீர்மானித்துள்ளதாகவும் சந்தீப் சூரி கூறினார். தற்போது பெரும்பாலான தியேட்டர்களில் கொரோனாவுக்கு முன்பு வெளியான படங்கள் தான் திரையிடப்பட்டுள்ளன. புதிய படங்கள் வெளியாகும் போது மேலும் ரசிகர்கள் வருவார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்புகின்றனர்.