எங்களோடு வாருங்கள்... கமல்ஹாசனுக்கு வந்த திடீர் அரசியல் அழைப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த கமல்ஹாசன் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். அதுவும் முதல்வர் வேட்பாளராக. இதற்கான வேலைகளை இப்போது இருந்தே முடுக்கி விட்டுள்ளார் கமல். எனினும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்கிடையே, கமலுக்கு கூட்டணி தொடர்பாக திடீர் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அது காங்கிரஸ் தரப்பில் இருந்து. அழைத்தவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

இதுதொடர்பாக தனியார் டிவிக்கு அவர் கொடுத்த பேட்டியில், ``கமலை பொறுத்தவரை மதச்சார்பற்ற மனிதராக, மதசார்பற்றக் கருத்துகளை, இடதுசாரி கருத்துகளைச் பேசுகிறார். அப்படிப்பட்டவரின் அரசியல் மதசார்பற்ற அணிக்கு உதவவில்லை. மதச்சார்பற்ற அரசியல் அணி இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அந்த அணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

மதவாதம் அதிகரித்துள்ள, இந்த சூழ்நிலையில் மதசார்பற்ற அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் கமல் தனித்து நிற்பது அவர் பேசும் மதச்சார்பற்ற கொள்கையை சிதைத்து விடும். அது மறைமுகமாக பாஜகவுக்கோ அதிமுகவிற்கோ பயனளிக்கும். கமலின் நோக்கம் அது கிடையாது என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால், அவரது தனித்தன்மை அந்த திசையை நோக்கி சென்று விடும் என்பதை எனது அரசியல் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். எனவே,கமல் தனித்து நிற்காமல், எங்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம்" என்று திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு கமல் தரப்பு என்ன பதில் கொடுக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News >>