நாற்று நட்டு.. களை பறித்து.. அறுவடை செய்து.. ஒரு நிஜ விவசாயி எம்எல்ஏ.
பச்சை நிறத்துண்டைதலையில் கட்டிக்கொண்டு, மண்வெட்டி ஒன்றை சுமந்து, நான் ஒரு விவசாயி' என ஒயிட் அண் ஒயிட்டில் போஸ் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நிஜமாகவே ஒரு விவசாயி அரசியல்வாதியாக இருக்கிறார். அவர் ஒரு எம்.எல்.ஏ. சற்று வித்தியாசமானவர். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள 'உதுமா' தொகுதியின் எம்.எல்.ஏ. குஞ்ஞி ராமன் தான் இந்த நிஜ விவசாயி.
72 வயதான இவர் தனக்கு சொந்தமான வயலில் தானே முன் நின்று நாற்று நடுகிறார். உரம் போடுகிறார். களை எடுக்கிறார். அறுவடையும் செய்கிறார். கடந்த 2011 முதல் தற்போது வரை சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் இவர் நேற்று முன்தினம் தனது நெல் வயலில் அறுவடையை ஆரம்பித்து முடித்து தான் ஒரு அக்மார்க் விவசாயி என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இந்த பருவத்தில் நாற்று நட்ட சில தினங்களில் போதிய மழை கிடைத்ததால் பயிர்கள் செழிப்பாக வளரத் துவங்கின. மகிழ்ந்து போனார் இந்த மண்ணின் மைந்தர். அறுவடைக்கு சில நாட்களுக்கு முன் பெய்த திடீர் மழையால் கொஞ்சம் கவலைப்பட்டார் இந்த நிஜ விவசாயி. இருப்பினும் சற்றும் கலங்காமல் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் என பத்து நபர்களைச் சேர்த்துக்கொண்டு அறுவடையை துவக்கி மூன்றே நாட்களில் முடித்துவிட்டார்.
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் இப்படி வயலில் இறங்கி வேலை செய்கிறார் என்றில்லை எப்போதுமே சேட்டணின் வழக்கம் இதுதானாம்.