நவராத்திரி விழா.. இந்தியர்களுக்கு ஜோ பிடன் வாழ்த்து..
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும், கமலாஹாரிசும் நவராத்திரி வாழ்த்து கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 25 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இவர்களின் வாக்குகளை பெறுவதில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் மும்முரமாக உள்ளனர். ஜோ பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலாவை நிறுத்தியுள்ளதால், அவருக்கு இந்தியர்களின் ஆதரவு அதிகமாகியிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. அமெரிக்க இந்தியர்களும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து இந்தப் பண்டிககையை கொண்டாடுகின்றனர். இதையெடுத்து, ஜோ பிடனும், கமலா ஹாரிசும் இந்தியர்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜோ பிடன் தனது ட்விட்டர் வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களை நானும் ஜில் பிடனும் தெரிவித்துள்ளோம். இந்த நன்னாளில் அமெரிக்காவில் தீயவை அழிந்து புதிய நல்ல தொடக்கம் ஏற்பட வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். கமலா ஹாரிஸ் தனது வாழ்த்து செய்தியில், நமது சமூகத்தில் மேலும் பல உயர்வுகளை பெற இந்த விழா நமக்கு சிறந்த ஊக்கம் அளிக்க வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.