ஆள் வைத்து தன்னையே தாக்கிக் கொண்ட சாமியார்.. எதிரியை உள்ளே தள்ள முயற்சி.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் கூலி ஆட்களை வைத்து தன்னைத் தானே தாக்கிக் கொண்டார். கூலி ஆட்களை கைது செய்த போலீசார், சாமியாரின் நாடகத்தை கண்டுபிடித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் லக்னோ அருகில் உள்ள திர்ரே மனோரமா கிராமத்தில் ஸ்ரீராம் ஜானகி கோயில் உள்ளது. இதையொட்டி உள்ள ஆசிரமத்தில் அதுல் திரிபாதி என்ற மகந்த் சீதாராமதாஸ் சாமியார் வசிக்கிறார். இவருக்கும், அந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் அமர்சிங் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அந்த கோயிலுக்கு சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலத்துக்கு இருவரும் சொந்தம் கொண்டாடியுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே, அமர்சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தற்போது தலைவராக உள்ள வினய்சிங் என்பவருக்கும் அவருக்கும் இடையே விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், சாமியார் சீதாராமதாசும், வினய்சிங்கும் சேர்ந்து ஒரு ரகசியத் திட்டம் தீட்டினர்.
அதன்படி, இவர்களை அடியாட்களை ஏவி சாமியார் மீது தாக்குதல் நடத்தச் செய்தனர். கடந்த அக்.10ம் தேதி இரவு சாமியார் தூங்கும் போது அவரை அந்த அடியாட்கள் அடித்து விட்டு, துப்பாக்கியால் கையில் சுட்டு விட்டு தப்பியோடினர். துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து பார்த்த போது சுட்டவர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் தப்புவதை பார்த்தனர். இதன்பின், சாமியார் லக்னோவில் உள்ள கிங்ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தன்னை அமர்சிங் ஆள் வைத்து கொல்ல முயற்சித்ததாக புகார் கொடுத்தார். அந்த புகாரில் அமர்சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், தப்பியோடிய அடியாட்களை பிடித்து போலீசார் விசாரித்த போது சாமியாரின் குட்டு உடைந்தது. அமர்சிங்கை சிறைக்கு அனுப்புவதற்காக அவர் ஆடிய நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது அடியாட்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாமியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும் அவரையும் கைது செய்யவிருக்கிறார்கள்.
சாமியார் மீது தாக்குதல் நடந்த மறுநாள், உ.பி.யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசுக்கு எதிராக இந்து அமைப்புகள் எல்லாம் குரல் கொடுத்திருந்தன. இந்நிலையில், சாமியாரின் குட்டு உடைந்துள்ளது. இந்த விவரங்களை மாவட்டக் கலெக்டர் நிதின் பன்சால், எஸ்.பி. சைலேஷ்குமார் பாண்டே ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.