லாலுவுக்கு வேதனை மேல் வேதனை - 4ஆவது வழக்கில் 14 ஆண்டுகள் சிறை
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4-ஆவது வழக்கிலும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகார் மாநில முதல்வராக 1990 முதல் 1997 வரை லாலு பதவி வகித்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ரூ. 950 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் தொடர்பாக, பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மொத்தம் 63 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.
இதனிடையே, தியோஹர் கருவூலத்தில் இருந்து 89 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டது தொடர்பான, லாலு மீதான வழக்கில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனால் லாலு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 18 நாட்களில் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 3-ஆவது வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்திலிருக்கும் சாய்பாஷா கருவூலத்தில் ரூ. 33 கோடியே 67 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில், லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தும்கா கருவூலத்திலிருந்து ரூ. 3 கோடியே 97 லட்சமும், டோரண்டா கருவூலத்தில் ரூ. 184 கோடியும் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 2 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்நிலையில், தும்கா கருவூலத்தில் ரூ. 3 கோடியே 97 லட்சம் கையாடல் செய்த வழக்கிலும் லாலுவை குற்றவாளி என்று, மார்ச் 19ஆம் தேதி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் மார்ச் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படி, மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4-ஆவது வழக்கில், தண்டனையை அறிவித்த ராஞ்சி சிறப்பு நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தலா 7 ஆண்டுகள் வீதம் லாலு பிரசாத்துக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்தது.
அதாவது, அடுத்தடுத்து 7 ஆண்டுகள் என மொத்தம் 14 ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் லாலு-வுக்கு 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com