கொரோனா வைரஸ் நமது தோலில் 9 மணி நேரம் உயிருடன் இருக்குமாம்..

கொரோனா வைரஸ், நமது உடல் தோலில் 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இது வரை மூன்றரை கோடி பேருக்கு நோய் பாதித்த நிலையில், 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நோய் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. தற்போது இந்தியாவில் 75 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்திருந்தாலும், பெரும்பாலானோர் குணம் அடைந்துள்ளனர். சுமார் 8 லட்சம் பேர்தான் சிகிச்சையில் உள்ளனர்.இந்நிலையில், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் நோய் பற்றி பல்வேறு ஆய்வு முடிவுகளும் வெளியாகி வருகின்றன.சமீபத்தில் ஜப்பான் நாட்டு மருத்துவ நிபுணர்கள் இந்த கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவுகளை கிளினிக்கல் இன்பெக்‌ஷியஸ் டிஸ்ஈஸ் ஜர்னல் என்ற மருத்துவப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். இதன்படி, சாதாரண புளூ வைரஸ், நமது உடல் தோலில் 1.8 மணி நேரம் உயிர்ப்புடன் இருக்குமாம். அதே சமயம், சார்ஸ்-2 என்ற இந்த கொரோனா வைரஸ், நமது உடல் தோலில் 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்குமாம். கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடலில் இருந்த கொரோனா வைரஸ்களை பரிசோதனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது. கொரோனா, புளூ வைரஸ்கள் மீது எத்தனால் தெளித்தால் 15 வினாடிகளில் அவை உயிர்சக்தியை இழந்து விடுகின்றன. எனவே, எத்தனால் உள்ள கிருமிநாசினிகளை கொண்டு நாம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று அந்த ஆய்வு முடிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

More News >>