4 வருடங்களுக்குப் பின் தோனியை பழி வாங்கிய அக்சர் பட்டேல்.
4 வருடங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் போட்டியில் அக்சர் படேலின் கடைசி ஓவரில் தோனி 23 ரன்கள் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். அதே போல 4 வருடங்களுக்கு பின்னர் கடைசி ஓவரில் 3 சிக்சர்கள் அடித்து அக்சர் பட்டேல் தோனியை பழிவாங்கினார். ஐபிஎல் சீசனில் 9வது போட்டி கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் புதிதாக உருவாக்கப்பட்ட புனே அணியின் கேப்டனாக தோனி இருந்தார். அந்த வருடம் மே 21-ம் தேதி புனே அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கும் இடையே போட்டி நடந்தது. அப்போது பஞ்சாப் அணிக்காக அக்சர் பட்டேல் விளையாடினார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய புனே அணி 19 ஓவர்கள் முடிந்த போது 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் வெற்றிபெற அந்த அணிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது 7வது விக்கெட்டுக்கு ஜோடியாக கேப்டன் தோனியும் , அஸ்வினும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை வீச வந்தது அக்சர் பட்டேல். கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுப்பது சாத்தியமில்லை என்று தான் அனைவரும் கருதினர். ஆனால் களத்தில் தோனி இருப்பதால் எதுவும் நடக்கும் என்ற நிலை இருந்தது. அக்சர் பட்டேல் வீசிய முதல் பந்தில் தோனியால் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை.
2வது பந்து லெக் சைடில் வைடு ஆனது. 3வது பந்தை தோனி மிட்விக்கெட்டுக்கு மேலே தூக்கி அடித்தார். அது சிக்சர் ஆனது. 4வது பந்தில் லாங் ஆஃப் திசையில் அவர் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த பவுண்டரியின் மூலம் தோனி அரைசதத்தை கடந்தார். புனே அணி வெற்றி பெற கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தை தோனி மிட்விக்கெட்டுக்கு மேல் தூக்கி சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் தோனி தன்னுடைய ஸ்பெஷலான ஹெலிகாப்டர் ஷாட் மூலம் மேலும் ஒரு சிக்சர் அடித்து தன்னுடைய அணியை வெற்றிபெற வைத்தார். தன்னுடைய கடைசி ஓவரில் தோனி 23 ரன்கள் அடித்த அதிர்ச்சியிலிருந்து அக்சர் பட்டேல் மீண்டு வர நீண்ட நாட்கள் ஆனது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி அணிக்கு வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் தவானும் அக்சர் படேலும் இருந்தனர். அஜய் ஜடேஜா வீசிய முதல் பந்து வைடு ஆனது. அடுத்த பந்தில் தவான் ஒரு ரன் எடுத்து மறுமுனைக்கு சென்றார். 3வது பந்தை சந்தித்த அக்சர் படேல், மிட் விக்கெட்டுக்கு மேல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்து லாங் ஆஃபுக்கு நேராக சென்று எல்லை கடந்தது. இதன் பின்னர் அடுத்த பந்தில் அதிவேகமாக ஓடி அக்சர் படேல் 2 ரன்கள் சேர்த்தார் 5வது பந்தில் லாங் ஆனில் ஒரு சிக்சர் பறந்தது. இதையடுத்து சென்னைக்கு எதிராக டெல்லி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் டெல்லிக்கு கிடைத்த 22 ரன்களில் 20 ரன்களையும் அக்சர் படேல் தான் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த 4 வருடங்களாக அக்சர் படேல் தன்னுடைய மனதில் தேக்கி வைத்திருந்த வேதனையை நேற்று தோனியை பழிவாங்கியதின் மூலம் தீர்த்துக் கொண்டார்.