மீண்டும் மலையாளத்திற்கு செல்லும் நயன்தாரா.
கடந்த வருடம் நிவின் பாலியுடன் நடித்த 'லவ் ஆக்சன் டிராமா'வுக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் குஞ்சாக்கோ போபன் நாயகன் ஆகிறார்.
நயன்தாரா சினிமாவில் வருவதற்கு முன் ஒரு மலையாள தனியார் டிவியில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2003ல் பிரபல மலையாள டைரக்டர் சத்யன் அந்திக்காடு, 'மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் நயன்தாராவை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் படத்தில் ஜெயராம் தான் நாயகனாக நடித்திருந்தார். இதன் பின்னர் மோகன்லாலுடன் 'விஸ்மயத்தும்பத்து', 'நாட்டு ராஜா' என அடுத்தடுத்து 2 படங்களில் நடித்தார். இதன் பின்னர் தான் தமிழில் சரத்குமாருடன் ஹரி இயக்கிய ஐயா படத்தில் நாயகியாக நடித்தார். இதன்பிறகு தமிழில் இவரது மார்க்கெட் சூடு பிடித்தது. சந்திரமுகி, கஜினி, சிவகாசி, சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி என ரஜினி, அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
தமிழில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதும் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்தார். இதனால் தாய் மொழியான மலையாளத்தின் பக்கம் அவரால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் இடையே மம்மூட்டியுடன் தஸ்கரவீரன், ராப்பகல் உள்பட ஒருசில படங்களில் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் ஒரு இடைவெளிக்குப் பின்னர் கடந்த வருடம் நிவின் பாலியுடன் லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்த படத்திற்கு பின்னர் நயன்தாரா ஒரு வருடத்திற்கு மேலாக மலையாள படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது இவர் நிழல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பவர் குஞ்சாக்கோ போபன். இவர் தான் தன்னுடைய பேஸ்புக்கில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள எடிட்டரான அப்பு பட்டதரி இந்த படத்தில் டைரக்டராக அறிமுகமாகிறார். திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் திரைக்கதையை சஞ்சீவ் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தீபக் மேனன், இசையமைப்பது சூரஜ் எஸ்.குருப். இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படவில்லை.