நியூஸிலாந்திலும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழச்சி... வனுஷி வால்டர்ஸ்!
நியூசிலாந்து பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளார். அவரின் தொழிலாளர் கட்சி நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறது. இதனால் 2ம் முறையாக ஜெசிந்தா பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார். பதிவான மொத்த வாக்குகளில் 70 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளை பெற்றது. இதேபோல், கூட்டணிக் கட்சியான கிரீன் கட்சி 7.6 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகள் கிடைத்ததை அடுத்து, ஜெசிந்தாவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும், இறுதி முடிவுகள் வெளியாக இரண்டு வாரங்கள் ஆகும்.
இதற்கிடையே, இந்த தேர்தலில் தமிழ் பெண்மணி ஒருவரும் வெற்றிபெற்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர் பெயர் வனுஷி வால்டர்ஸ் ராஜநாயகம். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டு இலங்கையில் பிறந்த வனுஷி, தனது 5 வயதில் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். மனித உரிமை வழக்கறிர், மனித உரிமைகள் ஆணையகத்தின் மூத்த மேலாளர் என நியூசிலாந்தில் பல்வேறு பதவிகளை வகித்தவர், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி சார்பில், நியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டார். தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், ஹாமில்டனுக்கான கிரிக்கெட் வீரருமான தேசிய வேட்பாளர் ஜேக் பெசன்ட் என்பரை வனுஷி எதிர்த்து போட்டியிட்டார். இதில், 14,142 வாக்குகளைப் பெற்று வெற்றியை தன் வசம் ஆக்கினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் எம்பியாகும் இலங்கையில் பிறந்த முதல் நபர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார்.