பெற்ற மனம் கல்லு : பிள்ளை மனம் பித்து.
ராஜபாளையத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்ற தந்தை போலீசில் சரண் அடைந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பழனிகுமார். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு 6 வயதில் மகாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது. பிறந்தது முதலே அந்தக் குழந்தை மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்துள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் குழந்தையை கவனிக்க வேறு யாரும் இல்லை. இதனால் பல நாட்கள் அந்த குழந்தை தனிமையில் வீட்டிலேயே இருந்துள்ளது.
கொரானா ஊரடங்கு காரணமாக பழனிக்குமாருக்கு சில மாதங்களாக வேலை இல்லாததால் வருவாயும் இல்லாமல் போனது. இந்த நிலையில் மன வளர்ச்சி இல்லாத குழந்தையை பழனிகுமாரால் வளர்க்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து அவர் ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார். இன்று காலையில் மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்த பழனிகுமார், பெற்ற மகளை மூச்சு திணறச் செய்து கொலை செய்தார். பின்னர் ராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாத மகளை, வறுமை காரணமாக வளர்க்க முடியாத நிலையில் தந்தையே கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது பழமொழி . ஆனால் பழனிக்குமார் விஷயத்தில் அது மாறி பிள்ளை பித்து பிடித்த நிலையி இருக்க பெற்ற தந்தை மனதை கல்லாக்கி கொண்டு மகளை கொலை செய்துள்ளார்.