ரேஷன் கடை தகராறில் துப்பாக்கிச் சூடு: பா.ஜ.க பிரமுகர் கைது.

உத்திர பிரதேசத்தில் ரேஷன் கடைகள் ஒதுக்கீடு குறித்து நடந்த விவாதம் சண்டையாக மாறியது. அதில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக பாரதீய ஜனதா பிரமுகரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரேஷன் கடைகள் ஒதுக்கீடு குறித்து நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஜெய் பிரகாஷ் (வயது 46) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை சுட்டுக் கொன்றதாக திரேந்திரா சிங் லக்னோ - பைசாபாத் நெடுஞ்சாலையில் சிறப்பு அதிரடி படையினரால் பிடிக்கப்பட்டார். தலைமறைவாகும் நோக்கத்தில் திரேந்திரா சிங் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கொலையுண்ட ஜெய் பிரகாஷின் குடும்பத்தினர் கோரியுள்ளனர். ரேஷன் கடைகள் குறித்த விவாதம் திரேந்திரா சிங் மற்றும் ஜெய் பிரகாஷ் இடையே சண்டையாக வெடித்ததாகவும் திரேந்திரா சிங் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

கூட்டத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், தாம் தவறு எதுவும் செய்யவில்லையென்றும் திரேந்திரா சிங் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சரணடையும் மனுவை தாக்கல் செய்துள்ள திரேந்திரா சிங், பாரதீய ஜனதா கட்சியில் அப்பகுதி முன்னாள் படைவீரர் பிரிவின் முன்னாள் தலைவராவார்.

More News >>