தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு 3900 ஆக குறைந்தது..

தமிழகத்தில் தினமும் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை முதல் முறையாக 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தினமும் புதிதாகப் பாதிப்பவர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 10 நாட்களாகப் புதிதாகத் தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. நேற்று இது 4 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. நேற்று 3914 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 87,400 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4929 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 37,637 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 56 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,642 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 40,192 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 1036 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 174 பேருக்கும், திருவள்ளூர் 195, காஞ்சிபுரம் 130, கோவையில் 319, ஈரோடு 119, திருப்பூர் 166, நாமக்கல் 117, சேலம் மாவட்டத்தில் 191 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 89,995 பேருக்கும், செங்கல்பட்டில் 41,164 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 36,966 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் 88,644 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இது வரை மொத்தத்தில் 86 லட்சத்து 96,455 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More News >>