பெண் வேட்பாளர் மீது மோசமான கமென்ட்.. கமல்நாத் மீது பாஜக புகார்..
காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவி, இடைத்தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் குறித்து கமல்நாத் மோசமாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. காங்கிரசிலிருந்து 21 எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுத்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது. சிவராஜ் சவுகான் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், கட்சித் தாவுவதற்காக 21 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.பாஜகவுக்கு தாவிய முன்னாள் பெண் அமைச்சர் இமர்தி தேவிக்கு பாஜகவில் சீட் தரப்பட்டுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கமல்நாத் நேற்று டாப்ராவில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், எங்கள் வேட்பாளர் மிகவும் எளிமையானவர். எதிரணியில் இருப்பவரைப் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த ஐட்டத்தை நான் பெயர் சொல்ல வேண்டுமா? என்று கேட்கவும், கூட்டத்தினர், இமர்தி தேவி என்று கத்தினர். கமல்நாத்தின் இந்த பேச்சுக்கு முதல்வர் சவுகான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து அமைச்சர் வரை உயர்ந்த பெண்ணைப் பற்றி கமல்நாத் இழிவாகப் பேசியுள்ளார். காங்கிரசார் இந்த லட்சணத்தில்தான் பெண்களை மதிக்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும், பாஜக சார்பில் கமல்நாத் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இமர்தி தேவி கூறுகையில், பெண்ணை பெற்ற சோனியா காந்திக்குப் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரியும். அவர் கமல்நாத்தைக் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.