இந்த இரண்டு விஷயங்களுக்கு தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார் - தமிழருவி மணியன்
திராவிடக் கட்சிகள் அழித்துவிட்டனர்; உடனடியாக அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் வைத்துத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சாவடி அருகேயுள்ள காந்தி பூங்கா மற்றும் காந்தி சிலையை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழருவி மணியன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட திராவிடக் கட்சிகள் அழித்துவிட்டனர். தற்போதைய சூழலில் உடனடியாக அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் வைத்துத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார்.
தமிழகத்தின் நிலை குறித்து ஏதாவது சொன்னால், உடனடியாக விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகள் கேள்விக்கு விளக்கம் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் ரஜினியின் அரசியல் அவ்வாறு இருக்காது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கம்.
எனவே, அவரை முதல்வராக்கினால் ரஜினி நிச்சயம் மக்களுக்கான ஆட்சியைக் கொண்டு வருவார். நிச்சயம் தமிழகம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாக விளங்கும். தமிழக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com