ஏழு மாநிலங்களில் கேலோ இந்தியா சிறப்பு மையங்கள் தமிழ்நாட்டிற்கு நோ
நாட்டில் 7 மாநிலங்களில் கேலோ இந்தியா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு இடமில்லை. விளையாட்டில் திறமை உள்ள வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக கேலோ இந்தியா என்ற திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வலுவான ஒரு விளையாட்டுச் சூழல் அமைப்பை உருவாக்கும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களை உருவாக்க இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்தது.
ஒரு மாநிலத்தில் ஏற்கனவே உள்ள விளையாட்டு பயிற்சி மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களாக மாற்றி உலகத்தரத்திற்கு மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு மேம்படுத்தப்படும் மையங்களில் திறமை மிகுந்த பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களை மத்திய அரசே நியமனம் செய்யும் . அது மட்டுமல்லாது விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்கும். வீரர்களுக்கான உணவு, இருப்பிட பராமரிப்புகளை மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இத் திட்டத்தின்படி முதல் கட்டமாகக் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மிசோரம், நாகலாந்து ஆகிய 8 மாநிலங்களில் உள்ள விளையாட்டு பயிற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களாகத் தரம் உயர்த்தப்பட உள்ளது. . இரண்டாவது கட்டமாக அசாம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும், தாத்ரா நாகர்வேலி மற்றும் டாமன் டையு ஆகிய யூனியன் பிரதேசங்களும் தேர்வு செய்யப்பட்டன. இப்போது மூன்றாவது கட்டமாக 2 யூனியன் பிரதேசங்கள் உள்பட மேலும் 9 மாநிலங்களில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.
இதன்படி ஆந்திரா, சத்தீஷ்கார், அரியானா, சண்டிகர், கோவா, திரிபுரா , இமாச்சல பிரதேசம், ஆகிய 7 மாநிலங்களும், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இத்துடன் மொத்தம் 20 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 24 சிறப்பு விளையாட்டு மையங்கள் அமைய உள்ளன. ஆனால் இதில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. இதற்கு முந்தைய மேம்பாட்டுத் திட்டமான சாய் சப்சென்டர் திட்டம் கூட விளையாட்டு பயிற்சிக்கான போதிய இடம் இல்லாமல் தமிழ்நாட்டிற்குக் கிடைக்காமல் போனது.