ரிலையன்ஸ்க்கு போட்டியாக டாடாவும் வருகை சில்லறை விற்பனை சந்தையில் மிகப்பெரிய போட்டி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோமார்ட் அறிமுகம் மற்றும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின் இந்தியச் சில்லறை விற்பனை சந்தையில் மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது. ஏற்கனவே சில்லறை விற்பனை சந்தையில் இருக்கும் அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் ஆகிய நிறுவனங்களும் புதிய முதலீடுகளைத் திரட்டி வர்த்தகத்தைப் பல வகையில் விரிவாக்கம் செய்து வருகிறது .

இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் நேரடியாகப் போட்டிப் போடும் திட்டத்துடனும், இந்திய ரீடைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்த டாடா குழுமமும் களமிறங்கியுள்ளது. இதற்காக சில மாதங்களுக்கு முன்பு டாடா குழுமம் பல்வேறு பிரிவுகளின் கீழ் இருக்கும் தனது ரீடைல் வர்த்தகத்தை ஒரே நிறுவனத்தில் இணைத்தது . மேலும் ரிலையன்ஸ் மற்றும் அமேசானுக்குப் போட்டியாகப் பல்வேறு சேவைகளை அடங்கிய சூப்பர் ஆப்-ஐ உருவாக்கும் பணியில் டாடா குழுமம் தீவிரமாக உள்ளது.

அதே சமயம் முக்கியமான இரு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. டாடா அதிரடி முடிவுகள் இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்படுகிறது . ஏற்கெனவே உப்பு முதல் ஆடை, ஸ்டீல், கார் எனப் பல ஆயிரம் பொருட்களை விற்பனை டாடா வருகிறது. ஆனாலும் சில்லறை வணிக சந்தையில் டாடா முழுமையாக இறங்கவில்லை. இந்த நிலையில் தான் தனது சில்லறை வர்த்தகத்தைக் கூறாக்கிய காலத்தில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்து சந்தையில் முன்னோடியாக இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் வர்த்தகத்தைக் கைப்பற்ற டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தற்போது இந்தியா மார்ட் நிறுவனத்துடனும், மளிகை பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் முன்னோடி நிறுவனமான பிக்பேஸ்கட் நிறுவனத்துடனும் வர்த்தகம் அல்லது நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றுவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வருடத்திற்கு 113 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் டாடா குழுமம், தற்போது சில்லரை வணிகத்தில் இறங்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகளைச் செய்து வருகிறது.

இந்தியாமார்ட் மற்றும் பிக்பேஸ்கட் உடனான டாடாவின் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் டாடா குழுமம் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையை அடையும். இந்தியாமார்ட் மும்பை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் சில்லறை சந்தையில், சுமார் 60 சதவீத வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிறுவனப் பங்குகள் நடப்பு ஆண்டில் 140 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் நாடு முழுவதும் 84 அலுவலகங்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறது இந்தியாமார்ட்.

பிக்பேஸ்கட் ஆன்லைன் மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனையில் பல பெரிய நிறுவனங்கள் இறங்கி தோல்வி அடைந்த நேரத்தில் பிக்பேஸ்கட் மட்டுமே வெற்றிபெற்றது. தற்போது பல்வேறு நகரங்களில் இந்தக் நிறுவனம் ஆன்லைன் சேவை அளித்து வருகிறது. இன்றைய நிலையில் இதன் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலராகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியிடம் போதிய பணம் இருந்தாலும் டாடா குழுமத்திடம் மிகப்பெரிய சங்கிலித் தொடர் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் உள்ளது. இதனால் ஏந்தொரு வணிகமாக இருந்தாலும் நாடு முழுவதும் மிகவும் குறுகிய காலத்திற்குள் டாடா குழுமத்தால் இலக்கை அடைய முடியும். சில்லரை சந்தை வர்த்தகத்தில் டாடா குழுமம் வேகமாக இயங்க ஆரம்பித்திருப்பது முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

More News >>