கொலை மிரட்டல் விடுத்த கைதி.. ஏற்க மறுத்த சிறை அதிகாரிகள்: 12 மணி நேரம் தவித்த போலீசார்

பொய்வழக்கு போட்டதாகக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த கைதியைச் சிறை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால், கைதியோடு 12 மணி நேரம் அலைந்த போலீசார்.திருமங்கலம் மறவன் குளத்தில் ஒரு வீட்டில் அருகே விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவராமன் (34) என்பவரைக் கைது செய்தனர். இவர் விபச்சார புரோக்கர் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சிவராமன் வாக்குமூலத்தின் அடிப்படையில் வடபழஞ்சி அருகே அடக்கம் பட்டியைச் சேர்ந்த துரைராஜ் 34, என்பவரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கார்கள், ரூ. 9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் திருமங்கலம் குற்றவியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். துரைராஜைச் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸார் மேலூர் சிறைக்கு துரைராஜை அழைத்துச் சென்றனர். அங்கு துரைராஜ் தற்கொலை செய்து கொள்ள வேண்டித் தூக்க மாத்திரை சாப்பிட்டாக தெரிவித்துள்ளார், இதனால் சிறை நிர்வாகம் அவரை ஏற்க மறுத்து விட்டது. மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதனை செய்ததில் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தும் மேலுார் கிளை சிறை நிர்வாகம் கைதியை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து , திருமங்கலம் கிளை சிறைக்கு துரைராஜை போலீசார் அழைத்து வந்தனர். அங்கும் அவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார், இதனால் சிறை நிர்வாகம் கைதியை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் சிறை வாசலில் சுவற்றில் முட்டி தற்கொலை முயற்சி செய்ததால் போலீசார் பதறிப் போயினர்.பின்னர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கைதியிடம் பேசி சமாதானம் செய்ததையடுத்து காலை 6.30 மணிக்கு திருமங்கலம் கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

More News >>