இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை நேரலையாக வீட்டிலிருந்தே பார்க்க வசதி

கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது நெருங்கிய உறவினர்களின் மரண இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கூட யாராலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக நேரலையாக வெப் காஸ்டிங் மூலம் ஒளிபரப்ப திருவனந்தபுரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தற்போது பொது இடங்களில் ஆட்கள் அதிகமாகக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 25 பேரும் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதுவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் கொரோனா நிபந்தனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். திருமணம், இறுதிச்சடங்கு உள்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்கள் இருக்கும் இடத்திலிருந்தே யூடியூப் மூலமோ, இணையதளம் மூலமோ பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சிக்குச் சொந்தமான மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை வெப் காஸ்டிங் மூலம் நேரலையாக ஒளிபரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தைக்காடு பகுதியில் நவீன மின் மயானம் உள்ளது. இது திருவனந்தபுரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மயானத்திற்கு பேஸ்-புக், யூ-டியூப் மற்றும் www.smarttvm.corporationoftrivandrum.in என்ற இணையப் பக்கமும் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக யூடியூப் மற்றும் இணையதளம் மூலம் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்ப திருவனந்தபுரம் மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஸ்ரீகுமார் கூறுகையில், தற்போது கொரோனா பரவல் காரணமாகத் திருவனந்தபுரம் மின் மயானத்தில் நடத்தப்படும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 25 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதுவும் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர் என்றால் அதிகபட்சமாக 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் தங்களது நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ள முடியாத நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்காக இங்கு நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை வெப் காஸ்டிங் மூலம் நேரலையாக ஒளிபரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. தங்கள் இருக்கும் இடத்திலிருந்தே மின் மயானத்தின் யூடியூப், பேஸ்புக், இணைய தளங்களில் நேரலையாகப் பார்க்கலாம் என்று கூறினார்.

More News >>