இலங்கை தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கல் : இன்டர்போல் எச்சரிக்கையை தொடர்ந்து க்யூ பிரிவு போலீசார் விசாரணை.
தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த தாதாக்கள் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான 'இன்டர்போல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பதுங்கி இருக்கும் இலங்கை தாதாக்களை பிடிக்க கியூ பிரிவு போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா மற்றும் பொன்சேகா ஆகியோருக்கு உதவி செய்தவர்களை பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் இலங்கை வாசிகள் வசிக்கும் இடங்களிலும், அகதிகள் முகாம்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து வரும் தொலைபேசி தகவல்களை கண்காணித்து, அதனடிப்படையில் சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் தலைமறை வாக இருக்கும் இலங்கை தாதாக்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு தமிழ கத்தில் வசதியாக வாழும் சில இலங்கை வாசிகளும் உதவி செய்து வருகின்றனர்.
இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், விசா காலம் முடிந்தும் நாடு திரும்பி செல்லாமல் இருக்கும் நபர்கள் குறித்து தனி விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2013 லிருந்து தற்போது வரை 13 பேர் விசா காலம் முடிந்தும் இலங்கைக்கு திரும்பிச் செல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தற்போது தமிழகத்தில்தான் இருக்கிறார்களா அல்லது வேறு பகுதி களுக்கு இடம்மாறி விட்டார்களா என்றும் விசாரணை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், அர சின் அனுமதி இல்லாமலும் யாரும் தங்கி உள்ளனரா, முகாம்களில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக யாரும் தங்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் கியூ பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிலர் கூடுதலாக இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விசாரணை நடந்து வரு கிறது. இதுவரை தமிழகம் முழுவதும் சந்தேகத்தின்பேரில் இலங்கை தமிழர்கள் 17 பேரை பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.