ரஜினிகாந்த் கட்சியெல்லாம் ஒரு கட்சியா? - திண்டுக்கல் லியோனி காரசாரம்
ரசிகர்களை அழைத்து, ‘நீங்கள் உங்கள் வேலைய பாருங்கள்; நான் என் வேலையை பார்க்கிறேன். 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்’ என்று ரஜினி கூறுகிறார். இது ஒரு கட்சியா? என்று திண்டுக்கல் ஐ லியோனி கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளையில் ஈரோடு மண்டல திமுக மாநாடு நேற்றும் 24ஆம் தேதி, இன்றும் 25ஆம் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் இருண்ட ஆட்சி என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், “தமிழகத்தில் ஆட்சி ஒன்று இருந்தால் தானே வெளிச்சமும், இருட்டும் இருப்பது தெரியும். கடந்த ஒரு ஆண்டாக முதல்வரும், துணை முதல்வரும் இருண்ட முகத்துடன், பயந்து போய் இருக்கிறார்கள். எத்தனை நாள், மாதம் இப்படி பயந்து போய் அமர்ந்திருப்பார்கள் என்று தான் தெரியவில்லை.
பல நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து மாவட்டத்திலும் கள இயக்கம் நடத்தி கட்சியை வலுப்படுத்தி வருபவர் மு.க.ஸ்டாலின். திமுக மேடையில் தான் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் களை கட்டும்.
பொடி போடும் இடைவெளியிலும், திராவிடர்களுக்காக பேசியது அண்ணாவின் குரல். ஒரே ஒரு வார்த்தையான என் இனிய உடன்பிறப்புகளே என்று கூறும் ஒரு குரலுக்கு லட்சோப லட்சம் கைத்தட்டல்கள் பறக்கும். அண்ணாவின் குரலும், கலைஞரின் குரலும் கலந்து பேசும் மு.க.ஸ்டாலினின் குரல் தான் நாளைய முதல்வரின் குரல். திராவிட பாரம்பரியம் மாறாத குரலாக விளங்கி வருவது மு.க.ஸ்டாலினின் குரல்.
ரஜினி, கமல் போன்ற எந்த நடிகர்கள் கட்சி துவங்கினாலும் அவர்களால் எதுவும் சாதிக்க முடியாது. மண்டபத்தில் ரசிகர்களை அழைத்து, ‘நீங்கள் உங்கள் வேலைய பாருங்கள்; நான் என் வேலையை பார்க்கிறேன். 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்’ என்று ரஜினி கூறுகிறார். இது ஒரு கட்சியா?
அண்ணா, முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுவதற்கே 2 பெட்டி வைத்து மக்கள் கருத்துக்களையும், கட்சியினரின் கருத்துக்களையும் கேட்டு தான் தேர்தலில் போட்டியிட்டார். நடிகர்கள் துவங்கும் கட்சி என்பது நேற்று பெய்த மழையில் முளைத்த கற்றாழை போன்றது. பெரியார், அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட திமுக என்பது ஆலமரம் போன்றது” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com