வருடத்துக்கு ஒரு படம் இசை அமைக்கும் ஞானியின் மகன்..

இசைஞானி இளையராஜாவின் வாரிசுகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி. மூவருமே இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள். யுவன் தனக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு இசை அமைக்கிறார். பவதாரணி எப்போதாவது படத்துக்கு இசை அமைக்கிறார். கார்த்திக் ராஜாவைப் பொறுத்தவரைக் கடந்த 4 ஆண்டுகளாக வருடத்துக்கு ஒரு படம் இசை அமைக்கிறார்.

கடைசியாக 2014ம் ஆண்டு வாராயோ வெண்ணிலாவே. ராஜாதி ராஜா (மலையளம்), அரண்மனை (பின்னணி இசை), அவன் அவள் என 4 படங்களுக்கு இசை அமைத்தார். அதன்பிறகு 2015ம் ஆண்டு சகாப்தம், 2016ம் ஆண்டு தில்லுக்கு துட்டு, 2017ம் ஆண்டு பகடை ஆட்டம், 2018ல் படைவீரன், 2019ல் மாமனிதன் என ஆண்டுக்கு ஒரு படம் இசை அமைத்துள்ளார். இந்த ஆண்டு மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்துக்கு இசை அமைக்கிறார்.

இப்படத்திற்கான இசை கோர்ப்பு பணிகள் தொடங்கி உள்ளன. ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின் மெண்ட் தயாரிக்கிறது.இது குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது:பிசாசு படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்க முடியாத இசையும் ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோது உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக்கான முக்கியத்துவம் விட்டுப்போய்விடக் கூடாது என நினைத்தேன். இசையும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து இக்கதையைக் கூற நினைத்தேன். தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது இசை பிரபலமான, பல படங்களுக்கு உயிர் தந்திருக்கிறது. அவருடன் இசையமைக்கும் பணியின் ஒவ்வொரு தருணமும் பெரும் சந்தோஷத்தைத் தருவதாக அமைந்திருக்கிறது. இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப்பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன்.

படத்தின் டைட்டிலுக்கிற்கு ரசிகர்கள் தந்த பேராதரவை கண்ட போது, பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களைப் போலவே நானும் "பிசாசு 2" படத்தை முழு வடிவமாகப் பெரிய திரையில் காண ஆவலுடன் உள்ளேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுதாக பூர்த்தி செய்ய, படத்தின் ஒவ்வொரு நொடியையும் வெகு கவனமுடன் செதுக்கி, உருவாக்கி கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் என்னையும் இந்த கதையையும் முழுதாக நம்பிய ராக்ஃ போர்ட் எண்டர்ட்யின் மெண்ட் நிறுவன தயாரிப்பாளர் டி. முருகானந்தமிற்கு நன்றி.இவ்வாறு மிஷ்கின் கூறினார்.

More News >>