மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது :எம்.பி. வைத்தியலிங்கம்
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என அதிமுக எம்.பி. வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.மத்திய அமைச்சரவையில், ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்துக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது வந்த நிலையில் அவர் இப்படிச் சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரவீந்திரநாத் குமார் அல்லது அதிமுக ராஜ்யசபை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் இணை அமைச்சர்கள் ஆவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுகவிற்கு யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் தேர்வில், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பு நீங்கி, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பாஜக அமைச்சரவையில் ஓபிஎஸ் மைந்தன் ரவீந்திரநாத்திற்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.
இந்த நிலையில், தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் வைத்தியலிங்கம், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு அதிமுகவில் சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது.