அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி :சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானம்...!
தமிழக அரசு அறிவித்தபடி, அரியர் தேர்வுக்குப் பணம் கட்டிய மாணவர்களின், இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற தேர்வுகளுக்குத் தேர்ச்சி வழங்கச் சென்னை பல்கலைக்கழக சிண்டிக்கேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்றவுடன் அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக, இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதையடுத்து, தமிழகத்திலும், இதே போன்று தேர்ச்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் அரியர் தேர்வுக்கு மாணவர்கர்கள் பணம் கட்டியிருந்தால், அவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், தமிழக அரசின் உத்தரவுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எதிர்ப்பு தெரிவித் திருந்தார் . முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையின்போது, அரியர் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளாமல் தேர்ச்சி அறிவிக்கக்கூடாது என ஏஐசிடிஇ ஆட்சேபனை தெரிவித்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த கல்லூரிகளில் பயிலும் அரியா் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கச் சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எத்தனை மாணவர்கள் அரியர் வைத்துள்ளனர் என்ற விவரம் கேட்டுத் தொகுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில். மாணவர்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்குவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரியா் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு சிண்டிகேட் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பின்னர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தைப் போல் தமிழகத்தின் ஏனைய பல்கலைக்கழகங்களும் அரியா் வைத்துள்ள மாணவர்களுக்கு தோ்ச்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. விரைவில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இது குறித்த இனிமையான தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.