தங்க கடத்தல் வழக்கு ஐஏஎஸ்அதிகாரியை கைது செய்ய மீண்டும் தடை...!

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை சுங்க இலாகா கைது செய்யக் கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஆகியவை தொடர்ந்து பலமுறை விசாரணை நடத்தின.

இதுவரை 100 மணி நேரத்திற்கு மேல் அவரிடம் 3 விசாரணை அமைப்புகளும் விசாரணை நடத்தின. ஆனால் சிவசங்கருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. பல கேள்விகளுக்கும் அவர் மழுப்பலான பதில்களையே கூறியதால் சிவசங்கரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிவசங்கருக்கு எதிராகச் சுங்க இலாகாவுக்கு சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தச் சுங்க இலாகா தீர்மானித்தது. இதன்படி கடந்த 16ம் தேதி சுங்க இலாகா அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள சிவசங்கரின் வீட்டுக்குச் சென்று, அவரை விசாரணைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் வழியில் தனக்கு உடல் நிலை என்று கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சிவசங்கர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், தன்னை அரசியல் காரணங்களுக்காகப் பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றனர். அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வெள்ளிக்கிழமை அன்று கஸ்டடியில் எடுக்கத் தீர்மானித்தனர். எப்போது வேண்டுமானாலும் நான் விசாரணைக்கு அதிகாரிகள் முன் ஆஜராகத் தயாராக உள்ளேன். என்னிடம் பலமுறை விசாரணை நடத்தியும் இதுவரை எனக்கு எதிராக எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது சுங்க இலாகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், சிவசங்கர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு முறையாக அவர் பதில் அளிக்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பியும் அவர் சம்மனை வாங்க மறுக்கிறார்.

எனவே அவரிடம் கூடுதலாக விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். ஆனால் சுங்க இலாகாவின் வாதத்தை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், சிவசங்கரை வரும் 23ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணை 23-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கனவே வரும் 23ம் தேதி வரை கைது செய்ய மத்திய அமலாக்கத் துறைக்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>