விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள்...!
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற திரைப்படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்காக அறிவிப்பு வெளியானது முதல் அந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என அவருக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான செயல் பட்டவர் முத்தையா முரளிதரன். எனவே அவரது வரலாற்றைச் சொல்லும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று காரணம் சொல்லப்பட்டது.
எனினும் விஜய் சேதுபதி அது குறித்து கருத்து எதுவும் சொல்லாமல் இருந்து வந்தார். இதனிடையே அவருக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்தனர். ஒரு நடிகர் என்ன வேடத்தில் நடிக்கலாம் என்பதை மற்றவர்கள் முடிவு செய்யக் கூடாது என்று பலரும் கருத்து தெரி வித்திருந்தனர்.
இந்த நிலையில் இலங்கை ஊடகம் ஒன்றிற்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ஒரு நல்ல கதை என்பதால் அதில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். . இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அந்த படம் பதில் சொல்லும் எனவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.
முத்தையா முரளிதரனே 800 திரைப்படத்தில் எனது வேடத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது வாழ்வியல் திரைப்படமான 800-ல் இருந்து விலகிக் கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டார் ., விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும் எனது வாழ்வியல் படத்தில் நடிப்பதால் தமிழ்நாட்டின் சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை எனவும் இந்த கோரிக்கையை விடுப்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.